socialmedia15316தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை சந்திப்பது குறித்த வியூகம், கூட்டணி, பிரச்சார திட்டம், ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த தேர்தலில் சமூக வலைத்தளங்களை முக்கிய பிரச்சார கருவியாக பயன்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

தற்போது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர்களுடன் தொடர்பு கொள்ள தனித்தனியே வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் காரணமாக சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்கப்பட்டு வருவதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக் சுவர்களை (FACEBOOK WALL) நம்பியுள்ளது. அரசியல்வாதிகளின் கவனம் முழுவதும் சமூக வலைதளங்களின் பக்கம் திரும்பியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் தற்போது அரசியல் குறித்த ஸ்டேட்டஸ்களை முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் பிரதான கட்சிகள் அனைத்தும் சென்னையை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இதற்கென ஒவ்வொரு கட்சியும் ஒரு டீம் அமைத்து வாட்ஸ் அப்பில் குழுக்கள் மூலமாக கட்சியின் செயல் திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இப்போது வாட்ஸ் அப்பில் குழுக்கள் வைத்துள்ளன. இதன் மூலம் கட்சியில் உள்ள நிகழ்வுகள், அடுத்தகட்ட பணிகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனால், கட்சி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மிக குறைந்த நேரத்தில் அதிகமானோருக்கு தெரிவிக்க முடிகிறது என்று கட்சியினர் மத்தியில் கருத்து நிலவுகின்றது.

தங்கள் கட்சியினரை மட்டுமின்றி, இணையதங்களைப் பயன்படுத்தும் நடுநிலை வாக்காளர்கள், இளைஞர்கள் ஆகியோர்களையும் நேரடியாக தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்களில் வாய்ப்பு கிடைப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கட்சிக் கொடி, போஸ்டர், சுவர் விளம்பரம் ஆகியவற்றை மறந்து, சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் மூலம் கருத்து பரிமாற்றத்தை மேற்கொள்ள விலையுயர்ந்த செல்பேசியுடன் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் வலம் வரத் தொடங்கியுள்ளனர். வருங்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கருதப்படுகிறது.

English Summary:In the election campaign, the role of social websites.