தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நாளை முதல் அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு ள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டு கழகத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “பொங்கல் புத்தகத் திருவிழா சென்னையில் வரும் 13-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 12 நாள்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.  250 அரங்குகள்: விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்தக் கண்காட்சி நடைபெறும். கண்காட்சியைப் பார்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளிலிருந்து அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்காக அமைக்கப்படவுள்ள 240 அரங்குகளில் இலக்கியம், ஆன்மிகம், பொது அறிவு, வரலாறு உள்பட பல்வேறு தலைப்புகளிலான நூல்கள் இடம்பெறவுள்ளன. பொதுமக்கள் வாங்கும் புத்தகங்களுக்கு மொத்த விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். கண்காட்சியில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

தொடக்க விழா: புத்தகத் திருவிழாவில் சென்னை வெள்ளம், புகழ்பெற்ற நூலகங்கள் ஆகிய தலைப்புகளில் சிறப்பு கண்காட்சிகள் நடைபெறவுள்ளன. புத்தகத் திருவிழாவையொட்டி புதன்கிழமை (ஜன.13) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, நீதிபதி சந்துரு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அதைத் தொடர்ந்து 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் எழுத்தாளர் பொன்னீலன், பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன், கவிஞர் செல்லகணபதி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

தினமும் சொற்பொழிவுகள்: கண்காட்சியை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பேச்சாளர் சுகி சிவம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சித்த மருத்துவர் கு.சிவராமன், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர். இவ்வாறு ஆர்.எஸ். சண்முகம் கூறினார்.

English Summary: 39th Chennai Book Fair starts January 13 and ends January 24th, 2016.