தமிழகத்தில் உள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் நிகழ் கல்வியாண்டில் (2018-19) தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என்று 2018- 19-ஆண்டு மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை, வேலூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 20 இடங்கள் கொண்ட விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை, அறுவைச் சிகிச்சை மற்றும் மயக்கவியல், கதிரியல் நோயறிதல், கண் பரிசோதனை ஆகிய பட்டப் படிப்பும், 4 இடங்கள் கொண்ட இதய சிகிச்சைப் பட்டப் படிப்பும் தொடங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 20 இடங்கள் கொண்ட விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை, அறுவைச் சிகிச்சை மற்றும் மயக்கவியல் பட்டப் படிப்பு தொடங்கப்பட உள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 இடங்கள் கொண்ட சிறுநீரக ரத்தப் பகுப்பாய்வு பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 20 இடங்கள் கொண்ட மருத்துவ ஆய்வக பரிசோதனை, மருத்துவர் உதவியாளர் ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.
அனைத்து படிப்புகளையும் சேர்த்து மொத்தம் 184 இடங்கள் கொண்ட மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் நிகழ் கல்வியாண்டு முதல் புதிதாக தொடங்கப்படவுள்ளன.
இந்த இடங்கள் விதிமுறைகளைப் பின்பற்றி மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.