downloadசென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்க உள்ளனர். சென்னை ஐகோர்ட்டுக்கு மொத்தம் 60 முதல் 75 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளை ஆகியவற்றில் 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 41 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுக்களில் வழக்குகளின் எண்ணிக்கையும் பெருமளவில் தேக்கமடைந்தது வருகிறது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் 6 வழக்கறிஞர்கள் மற்றும் 3 மாவட்ட நீதிபதிகள் அடங்கிய 9 பேர் பட்டியலை ஐகோர்ட் மூத்த நீதிபதிகள் குழுவான கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த 9 பேரில் தற்போது ஐகோர்ட் வழக்கறிஞர்களான வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணகுமார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன், சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்து கடந்தாண்டு ஓய்வுபெற்ற பி.கோகுல்தாஸ் ஆகிய 6 பேரையும் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட், பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததும், இவர்கள் 6 பேரும் முறைப்படி சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளாக விரைவில் பதவியேற்க உள்லனர்.

ஐகோர்ட் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுபவர்கள் பாரம்பரிய முறைப்படி இந்தி தேவநாகரி மொழியில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி, அதற்கான ஆவணங்களில் நேற்று இவர்கள் 6 பேரும் கையெழுத்திட்டு, அதை ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் பி.கோகுல்தாஸ் மட்டும் தனது 60-வது வயதில் ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6 பேரும் 62 வயது வரை இந்த பதவியில் நீடிப்பர்.

English Summary : 6 new judges to the Madras High Court. Swearing soon