அகில இந்திய அளவில் நடை பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாணவர்கள் திடீரென தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வான மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் என்று கூறப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற இந்த மாணவர்களில் இதர வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் (ஓபிசி) 6 பேரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று திடீரென தகுதி நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து 6 மாணவர்களுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘உங்களின் சம்பள வருமானம் ரூ. 6 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால், நீங்கள் ஓபிசி நான்- கிரிமீலேயர் வரம்புக்குள் வரவில்லை. எனவே நீங்கள் தகுதிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்’’ என்று விளக்கம் அளித்துள்ளது.
இதனால் அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க ரேங்கைப் பிடித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிக்கு தயாராகிய தமிழக மாணவர்கள் 6 பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கூறியபோது, ‘‘நாங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே எங்களின் அனைத்து சான்றிதழ்களையும் நன்கு பரிசீலித்துத்தான் தேர்வு எழுத அனுமதிக்கின்றனர்.
முதற்கட்ட தேர்வு மற்றும் பிரதான தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்று இப்போது பதவியை எதிர்பார்த்து இருக்கும்போது திடீரென எங்களை தகுதி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்று கூறினார்.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குர் சங்கர் கூறும்போது, ‘‘இந்த மாணவர்கள் சமர்ப்பித்த ஓபிசி நான் கிரிமீ-லேயர் சான்றிதழை ஏற்றுக் கொண்டுதான் தேர்வாணையம் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தது. தமிழகம் சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலம் கிடையாது. உயர்கல்வியில் பின்தங்கிய மாநிலமாக இருப்பதால்தான் குறிப்பிட்ட வகுப்பினருக்கு ஓபிசி சலுகை உள்ளது. தற்போது இந்த சலுகை மூலம் தேர்ச்சி பெற்றவர்களின் பணி வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது போல் தேர்வாணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்திருப்பது முறையற்றது. கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் சார்பி்ல் வழக்கு தொடர வுள்ளோம்’’ என்று கூறினார்.
English Summary:6 TN disqualified students who won the IAS exam