தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, விலை நிலைப்படுத்தும் நிதியம் மூலம், தக்காளி விலையை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. விலை குறையாவிட்டால் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்க திட்டமிட்டிருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, நேற்று தக்காளி வரத்து சற்று அதிகரித்த நிலையில், கோயம்பேடு சந்தையில் தக்காளிஒரு கிலோ ரூ.95-க்கு விற்பனையானது. சந்தையில் விலையை மேலும்குறைக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர் விஜயராணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: கூட்டுறவுதுறை மூலம் சென்னை, கோவை,திருச்சி, மதுரை, தூத்துக்குடி,திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும்62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

முதல்வர் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விலை ஏற்றத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக, வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென் சென்னையில் தலா 25 கடைகள் என மொத்தம் 82 நியாயவிலை கடைகளில் ஜூலை 4-ம் தேதி (இன்று) முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும். தேவைக்கு ஏற்ப, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நியாயவிலை கடைகள் மூலம் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *