Plastic_road_Chennaiபொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தபோதிலும், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் சென்னையில் தினமும் சேரும் சுமார் 5 ஆயிரம் டன் குப்பைகளில் 7% பிளாஸ்டிக் கழிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்படியே குப்பைக் கிடங்குகளுக்கு எடுத்துச்செல்லாமல் தவிர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று சென்னை நகரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி புதிய சாலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் முதன் முதலில் கடந்த 2013ஆம் ஆண்டில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை ஆகியவை பிளாஸ்டிக் கழிவுகளின் மூலப்பொருள்கள் கொண்டு போடப்பட்டன. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தூளாக்கப்பட்டு தார் கலவையுடன் 8 சதவீதம் அளவுக்கு கலந்து சாலைகள் போடப்படும். ஏற்கெனவே உள்ள தார் சாலைகளை 40 மி.மீ. ஆழத்துக்கு அகழ்ந்தெடுத்து அதன் மீது பிளாஸ்டிக் சாலைகள் போடப்படும். பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் கருவிகள் சில இடங்களில் செயல்படாமல் இருந்ததால், பிளாஸ்டிக் சாலை போடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய மண்டலங்களில் 92 சாலைகளை பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 126 உட்புறச் சாலைகள் போடவும் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகள் போட பயன்படுத்தினால் சாலைகள் நீண்ட நாட்களுக்கு உறுதியாக இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படாது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

English Summary: 92 Roads with Plastic Waste.Chennai Corporation Project.