சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசின் குடிநீர் வாரியமும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் தீவிரமாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

சென்னை அருகேயுள்ள நெம்மேலி என்ற பகுதியில் தொடங்கப்படவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை இறுதி செய்வதற்காக ஜெர்மன் அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழுவினர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

நெம்மேலியில் 150 மில்லியன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இத்திட்டத்துக்கான நிதி ஆதாரங்கள் வழங்குவது குறித்து கலந்தாலோசிக்க ஜெர்மன் அரசு நிதி நிறுவன அதிகாரிகள் நேற்று சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

நெம்மேலியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்காக ரூ.1,371.86 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு தேவையான நிதி உதவியை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இத்திட்டத்துக்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஜெர்மன் அரசு நிதி நிறுவனத்துக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ளது.

நெம்மேலியில் கடல்நீரை உள்வாங்கும் தொட்டியில் நகரும் வடிகட்டிகள், முதல்நிலை சுத்திகரிப்புப் பகுதியில் தட்டடுக்கு வடிகட்டும் தொட்டி, கரைந்து காற்றில் மிதக்கும் பொருட்களை வடிகட்டும் தொட்டி உள்ளிட்ட அமைப்புகளும் நிறுவப்படவுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை இந்திய தர நிறுவனத்தின் அளவு கோலின்படி குடிநீராக்கும் வகையில், சமன்படுத்தத் தேவையான சுத்திகரிப்பு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளது.

இந்த நிலையத்தை பணி ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 மாதங்களுக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை மாநகரின் மத்திய மற்றும் தென்சென்னை பகுதியில் சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்திருக்கும் தகவல் தொழில் நுட்ப மையங்கள், தொழிற்சாலைகள், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம் – புழுதிவாக்கம், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மயிலாப்பூர் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர். இவ்வாறு குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary: To convert Sea water into drinking water, New water plant is going to launch near Nemmeli. German Officials visited the Desalination plant is going to launch.