தமிழ்நாட்டில் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துள்ள நிலையில் பருப்பு விலை மட்டும் ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.
90 ரூபாய்க்கு விற்ற 1 கிலோ துவரம் பருப்பு இப்போது கிலோ 100 ரூபாயாக உயர்ந்து விட்டது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பருப்பு வகைகளுக்கு கூடுதலாக 5 ரூபாய் வாங்குவார்கள். 2–ம் ரகம் துவரம்பருப்பும் கிலோ ரூ. 80–ல் இருந்து ரூ. 90 ஆக உயர்ந்துள்ளது.
தான்சானியா நாட்டு துவரம்பருப்பு கிலோ ரூ. 70–ல் இருந்து ரூ. 80 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல் உளுந்தம் பருப்பு கிலோ ரூ. 80–ல் இருந்து ரூ. 85 ஆகவும், பர்மா உளுந்து ரூ. 68–ல் இருந்து ரூ.78 ஆகவும் உயர்ந்து விட்டது.
பாசிப்பருப்பு ரூ. 105–ல் இருந்து ரூ. 115 ஆகவும், 2–ம் ரகம் பருப்ப ரூ. 95–ல் இருந்து 105 ஆக உயர்ந்துள்ளது.
கடலை பருப்பு 1 கிலோ ரூ. 45–ல் இருந்து ரூ. 55 ஆகவும், 2–ம் ரகம் ரூ. 40–ல் இருந்து ரூ. 50 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது பற்றி தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி. கொடூவன் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியில் ஆன்லைன் வர்த்தகத்தில் பருப்பு வகைகளை தடை செய்து வைத்திருந்தனர். அதனால் விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால் இப்போது அந்த தடை நீக்கப்பட்டதாக தகவல் வருகிறது.
இதனால் மொத்த வியாபாரிகள், பருப்பு வகைகளை குடோன்களில் பதுக்கி செயற்கையாக விலையேற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
எப்போதும் விலை அதிகமாக விற்கப்படும் மலைப்பூண்டு கிலோ ரூ. 160–ல் இருந்து ரூ. 110 ஆக குறைந்து விட்டது. நாட்டு பூண்டு ரூ. 130–ல் இருந்து 80–க்கு விலை குறைந்துள்ளது. குண்டு மிளகாய் 1 கிலோ ரூ. 160–ல் இருந்து ரூ. 100க்கு குறைந்து விட்டது.
பாசுமதி அரிசி விலையும் கிலோ ரூ. 135–ல் இருந்து ரூ. 90 ஆக குறைந்து விட்டது. 2–ம் ரகம் ரூ. 120–ல் இருந்து ரூ.80 ஆக குறைந்து விட்டது.
இப்படி மற்ற பொருட்கள் விலை குறையும் போது பருப்பு மட்டும் விலை கூடுவதற்கு ஆன்லைன் வர்த்தக சூதாட்டமே காரணமாகும். எனவே அரசாங்கம் பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
English Summary : Since online trade barrier for pulses removed, it results in increase in rate upto Rs.10. some other products such as Mount garlic, Basmati rice, Garlic, Red chillies rate reduced.