fund4316தொழிலாளர் எடுக்கும் வைப்புநிதியின் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும் என சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு தொழிலாளர் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த வரி விதிப்பு மீதான இறுதி முடிவு பட்ஜெட் விவாதத்தில் அறிவிக்கப்படும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

2016-17-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(இ.பி.எப்.) இருந்து பணி ஓய்வு பெறும் தொழிலாளர் ஒருவர் பணத்தை எடுக்கும்போது 40 சதவீத தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியது.

தொழிலாளர் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பை அடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி டெல்லியில் நேற்று வர்த்தக சபை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ‘பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் 60 சதவீத தொகை மீதான வரிவிதிப்பு குறித்து பாராளுமன்ற பட்ஜெட் விவாதத்தின்போது மத்திய அரசு தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வு பெறுகிறவர்கள் பணத்தை எடுக்கும்போது 60 சதவீத தொகையின் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்கிற பரிந்துரை அரசுக்கு வருவாயை பெருக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டது அல்ல. இந்தியாவை ஓய்வூதியத்திற்காக சேமிக்கும் மற்றும் காப்பீடு மிகுந்த சமூகமாக மாற்றும் நோக்கத்துடன்தான் இந்த சிபாரிசு செய்யப்பட்டது என்றும் இந்த வரிவிதிப்பு மிக அதிக சம்பளம் பெறும் பிரிவினரை இலக்காக கொண்டே கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் 3 கோடியே 70 லட்சம் பேரையும் பாதிக்காது என்றும் கூறினார். ஏனென்றால் இவர்களில் சுமார் 3 கோடி பேர் ரூ.15 ஆயிரமும் அதற்கு கீழாகவும் வருமானம் ஈட்டுகிறவர்களாக உள்ளனர். இவர்களுக்கு இதில் எவ்வித மாறுதலும் கிடையாது. தனியார் தொழில் நிறுவனங்களில் புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்களிடம் இதன் தாக்கம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் மத்தியில் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிப்புக்கு எதிர்ப்பு உருவாகியிருப்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்ட அருண்ஜெட்லி, “தற்போது இது தொடர்பாக சில எதிர்விளைவுகள் காணப்படுகிறது. எனவே, பாராளுமன்ற பட்ஜெட் விவாதத்தின்போது இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றிய இறுதி முடிவு அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary: Tax of workers to deposit? Stormy workers.