அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களிடமிருந்து விடைத்தாள் மறு ஆய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
2018 ஏப்ரல்-மே பருவத் தேர்வில் பங்கேற்று, விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மறுமதிப்பீடு தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த மாணவர்களிடமிருந்து, விடைத்தாள் மறுஆய்வுக்கு விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது வரவேற்றுள்ளது. இதற்கு, கல்லூரி முதல்வர்கள் மூலம் மட்டுமே மாணவர்கள் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும். இந்த மறு ஆய்வுக்கு ரூ.3000 கட்டணத்தை வரவோலையாகச் செலுத்த வேண்டும்.
செப்.6 கடைசி: இந்த மறு ஆய்வின்போது, ஏற்கெனவே உள்ளதைக் காட்டிலும் 5 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், முன்னர் தோல்வியடைந்து மறுஆய்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் ரூ.3,000 கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டுவிடும். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 6 கடைசி தேதியாகும்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் கூறியது: விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறு ஆய்வு என்பது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே வழக்கமாக நடைபெறும். பல்கலைக்கழகத்துக்கு வெளியே நடத்தப்பட மாட்டாது.
இம்முறை, 2018 ஏப்ரல்- மே தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான மறுமதிப்பீடு வழக்கம்போல், பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. விடைத்தாள் மறு ஆய்வும் இதுபோலவே நடத்தப்படும். ஒவ்வொரு விடைத்தாளையும் இரண்டு தேர்வர்கள் மறுமதிப்பீடு செய்வர்.
கடந்த முறை மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் விடைத்தாள் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் மதிப்பெண் வேறுபாடு வரக்கூடிய விடைத்தாள்களுக்கு மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், சிலருடைய விடைத்தாள்களில் மதிப்பெண் வேறுபாடு இல்லாமல் உள்ளது. இதுபோன்ற வித்தியாசம் வராத விடைத்தாள்களை மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம். இவை மீண்டும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார்.