கடந்த ஒரு மாத காலமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில் சேரவிருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடித்துள்ள நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே தொடங்கி உள்ளன. இந்நிலையில் புதிய மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருவதால் அவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம், பதிவாளர் எஸ்.கணேசன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர் மேலும் கூறியதாவது:

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ராக்கிங்கை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் ராக்கிங்கை தடுக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அந்த கமிட்டியில் பேராசிரியர்கள் இருக்கவேண்டும். விடுதியில் ராக்கிங்கை கண்காணிக்கவேண்டும். வகுப்பு தொடங்கும்போதும் வகுப்பு முடியும்போதும் புதிய மாணவ-மாணவிகளை யாராவது ராக்கிங் செய்கிறார்களா? என்று ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும். கல்லூரியில் ராக்கிங்கை தடுக்க புகார் பெட்டி ஒன்று வைக்கவேண்டும். அந்த பெட்டியை தினமும் முதல்வர் திறந்து பார்க்கவேண்டும். முடிந்தால் தினமும் இருவேளை பார்க்கவேண்டும். இவ்வாறு பல ஆலோசனைகளை கூறியிருக்கிறோம்.

எந்த மாணவர் அல்லது மாணவியாவது ராக்கிங்கில் ஈடுபட்டாலும், உடனே கல்லூரி முதல்வரிடம் அல்லது கல்லூரி அலுவலகத்தில் புகார் செய்யலாம். எந்தகாரணம் கொண்டும் புகார் செய்பவர் பெயர் வெளியில் தெரியாது. ரகசியமாக வைக்கப்படும். மாணவர்கள் அல்லது மாணவிகள் ராக்கிங்கில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். விசாரணைக்கு பிறகு அவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதிக பட்சமாக 2 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ராக்கிங்கில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டால் எந்த கல்லூரியிலும் சேர்க்கப்படமாட்டார்கள். எனவே ராக்கிங் குறித்து புதிய மாணவ-மாணவிகள் கவலைப்படவேண்டாம். யாரும் ராக்கிங்கில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

English Summary : Anna University Vice Chairman announced that there will be necessary steps will be taken to prevent ragging.