0_MSVISHWANATHமறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த மாதம் 14ஆம் தேதி உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு சென்னையில் தமிழ்நாடு திரையிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு தமிழ்நாடு திரையிசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். இசைஞானி இளையராஜா இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் உருவ படத்தை திறந்து வைத்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் கூறியபோது ‘‘எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும். மயிலாப்பூர் லஸ் கார்னர் அல்லது கடற்கரை சந்திப்பில் அவருக்கு சிலை வைத்து அவருடைய நினைவை போற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் “எம்.எஸ்.விஸ்வநாதன் சிலையை சென்னையில் வைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது என்றும் அதை நானே முன் நின்று செய்வேன்’ என்றும் கூறினார்.

இந்த கூட்டத்தில் இசைஞானி இளையராஜா பேசியதாவது: ” சிறந்த இசை அமைப்பாளராக இருந்து அனைவரையும் தன்பக்கம் இழுத்துக் கொண்ட இசைமேதை எம்.எஸ்.வி.க்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தால் அதை நானே செய்து இருப்பேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து விட்டனர். அவருக்கு சென்னையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய இசை நமக்கு ஊக்க மருந்தாக இருக்கும்’ என்று கூறினார்

மேலும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, எஸ்.எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.சரண், ஹரிசரண், உன்னிகிருஷ்ணன், பாடகிகள் வாணிஜெயராம், கமலா, சைந்தவி, கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா, இசையமைப்பாளர் சங்க பொதுச்செயலாளர் ஏ.டொம்னிக் சேவியர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

English Summary:M S vishwanathan satue in chennai.Decided for Remembrance meeting.