rain-71215-12கடந்த நான்கு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்த நிலையில் தற்போது சென்னை மாநகரம் உள்பட அனைத்து நகரங்களும் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

மழை, வெள்ளம் பாதித்த இடங்களில் தடைபட்டிருந்த தொலைத் தொடர்பு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதாலும், மின்சாரம் தடைபட்டதாலும் நின்று போயிருந்த ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியுள்ளன. நேற்று முதல் பகல் நேர விமானப் போக்குவரத்தும், இன்று முதல் அனைத்து விமானப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. எனினும் இரவு நேரங்களில் விமானங்களை இயக்குவது குறித்து நிலைமைக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும் என்று இந்திய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இயல்புநிலை திரும்புகின்ற போதிலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால் சென்னை மக்களிடையே மீண்டும் கிலி ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தின் துணையுடன் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் ஹெலீகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நிறைவடையும் வரை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ராணுவத்தினர் மட்டும் 5,500 பேரை மீட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏதும் சென்னை நகரில் இல்லையென்றும் போதுமான அளவில் அவை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இவற்றை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை படகுகள் மூலம் மீட்கும் பணியில் 24 பேரிடர் தேசிய மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவ வீரர்கள், தமிழக தீயணைப்பு-காவல் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஈடுபட்டுள்ளனர். முப்படை வீரர்ளின் மீட்புப் பணிகளை அந்தந்தப் படை பிரிவின் உயர் அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 460 முகாம்களில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழை, வெள்ளச் சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், மழை, வெள்ளத்தால் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Chennai back to normalcy,army rescue continuous