கலைவாணர் என்.எஸ்.கே: நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!

என்.எஸ்.கே. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!

‘வசந்தசேனா’ படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!

தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!

என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!

‘மணமகள்’ படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் ‘நாட்டியப் பேரொளி’ பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!

1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். ‘இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்’ என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

என்.எஸ்.கே-வுக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!

கலைவாணர் ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், ‘எனக்குத் திருமணம்’ என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, ‘இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்’ என்றார்!

‘தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!

கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, ‘மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!

– rj_rofina

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *