ஆசிய கண்டத்தின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 572 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மயல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இம்முறை 36 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. 2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தையே பிடித்திருந்தது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வழக்கம் போன்று இம்முறையும் சீனாவே அதிக பதக்கங்களை வேட்டையாடும் என கருதப்படுகிறது. அந்த நாட்டுக்கு தென் கொரியா கடும் சவால் அளிக்கக்கூடும்.
இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடக்க விழா கோலாகலமாக ஜகார்த்தாவில் உள்ள ஜெலரோ பங் கர்னோ மைதானத்தில் நடைபெறுகிறது. 7.45 மணிக்கு வீரர்கள் அணிவகுப்பு நடைபெறும். இதில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார்.