சென்னையில் மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம் ரகசிய எண்களை பெற்று பணத்தை நூதன முறையில் திருடும் குற்றங்கள் அதிகரித்து வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்கும்படி சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களிடம் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்கித் தருவதாக செல்போனில் பேசி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு நம்பரை பெற்று, அதன்மூலம் பணத்தை சுருட்டுவதாக நேற்று ஒரே நாளில் 20 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். ஏ.டி.எம். கார்டு வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்களிடம் மர்ம நம்பர்கள் போனில் பேசுவார்கள். தங்களை சிபிஐ அதிகாரிகள் அல்லது வங்கி ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்தி வங்கி ஏ.டி.எம். கார்டை ஆய்வு செய்யவுள்ளதாகவும் புதுப்பித்து தருவதாகவும் சொல்லி ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு நம்பரை தெரிந்துகொண்டு, அதை வைத்து போலியாக ஏ.டி.எம். கார்டை தயாரித்து மோசைடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ஏ.டி.எம். மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துவிடுவார்கள். இதுபோன்ற பண மோசடி சம்பவங்கள் ஏற்கனவே சென்னையில் நடந்து வந்தாலும் தற்போது இந்த குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

English Summary: ATM Frauds increased in Chennai, Chennai Police Department.