கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று காலை 11மணி அளவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவித்தபடி 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக மதியம் 2.15 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. எவ்வித முன்னறிவிப்பு இன்றி சுமார் 3 மணி நேரம் தாமதமாக முடிவு வெளியானதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் இந்தியா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தங்கள் முடிவை தெரிந்து கொண்டனர்.

இன்று வந்த தேர்வு முடிவுகளின்படி இவ்வருடம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 97.32% என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 98.87% இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்விலும் வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.82% என்றும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.98% என்று பிடிஐ செய்தி தெரிவித்துள்ளது.

English Summary : CBSE 10th results released in website at 2.15pm after 3 hours delay.