சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (26.09.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஓரிரு இடங்களிலும், வரும் 28 முதல் அக்.1-ம் தேதி வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 28, 29-ம் தேதிகளில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

செப். 25-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி,

  • வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 12 செ.மீ.,
  • திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் மேல்ஆலத்தூரில் 10 செ.மீ.,
  • சென்னை சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ.,
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மாமல்லபுரம், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வரும் 28-ம் தேதி தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *