agarwal eye hospitalஉலகிலேயே முதல்முறையாக புதிய அறுவை சிகிச்சை மூலம் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு சென்னை அகர்வால் கண் மருத்துவமனை பார்வை கிடைக்க வைத்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் சமீபத்தில் பார்வை இழந்த இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பார்வதி மற்றும் சென்னையைச் சேர்ந்த 64 வயது கிருஷ்ணன் ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரின் கண்களையும் பரிசோதனை செய்த அகர்வால் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால், வழக்கமாக அனைவருக்கும் செய்யும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன தொழில்நுட்ப முறையான ‘பீடெக்’ (ப்ரீ டெசமென்ட்ஸ் எண்டோஸ் எண்டோதிலியல் கெரட்டோபிளாஸ்டி) என்ற சிகிச்சையை அளிக்க திட்டமிட்டார்.

அதன்படி, அமர் அகர்வால் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த நவீன சிகிச்சையை மேற்கொண்டனர். தானமாக கிடைத்த 17 வயது சிறுவனின் கண் கருவிழியில் இருந்து 25 மைக்ரான் (கருவிழியின் ஸ்டோரோமா திசு) எடுத்து ஊசி மூலம் கிருஷ்ணனின் இடது கண்ணில் செலுத்தினர். இதேபோல தானமாக கிடைத்த மற்றொருவரின் கண் கரு விழியில் இருந்து இருந்து 25 மைக்ரான் பார்வதியின் வலது கண்ணில் செலுத்தப்பட்டது. தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு இருவரின் கண்களிலும் குறைபாடு நீங்கி பார்வை கிடைத்ததாகவும், இந்த புதிய முறை அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும் மருத்துகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியபோது ‘‘பொதுவாக கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சையில் கண்ணின் கருவிழி மொத்தமும் மாற்றி அறுவைச் சிகிச்சை செய்யப்படும். உலகில் முதல் முறையாக புதிய முறையில் அறுவைச் சிகிச்சை செய்து பார்வை கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

சிகிச்சை செய்துகொண்ட பார்வதி கூறும் போது, ‘‘எனக்கு 2 கண்களிலும் புரை இருந்தது. வலது கண்ணில் பார்வை குறைந்துகொண்டே இருந்ததால், அறுவைச் சிகிச்சை செய்தேன். அதன்பின், வலது கண்ணிலும் சில மாதங்களில் இடது கண்ணிலும் பார்வை குறையத் தொடங்கியது. இதனால், தனியார் மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை செய்ததும், இடது கண் நன்றாக தெரிந்தது. வலது கண்ணில் பார்வை இல்லாததால், இந்த மருத்துவமனைக்கு வந்தேன். டாக்டர்கள் புதிய முறையில் அறுவைச் சிகிச்சை செய்து இழந்த பார்வையை கொண்டுவந்தனர். அவர்களுக்கு எனது நன்றி’ என்று கூறினார்.

English Summary:Chennai eye hospital in the world for the first time in the new method of eye surgery.