radar-101215சென்னை விமான நிலையம் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரன்வே மூழ்கியதால் ஒருசில நாட்கள் விமான சேவை பாதிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் தற்போது நிலைமை சீராகி அனைத்து விமானங்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென சென்னை விமான நிலையத்தில் ரேடார் பழுது காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நேற்று 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் புகுந்த வெள்ளத்தால் விமானங்களை இயக்க பயன்படுத்தப்படும் 3 ரேடார் கருவிகளில் 2 கருவிகள் பழுதடைந்துள்ளது. பழுதடைந்த ரேடார்களை சரி செய்து கடந்த 6ஆன் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது 346 விமான சேவையில் 300 விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று காலை ரேடார் கருவிகளில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது. மேலும் காலையில் மழை பெய்துகொண்டு இருந்ததால் மும்பையில் இருந்து 128 பயணிகளுடன் வந்த விமானமும், கொல்கத்தாவில் இருந்து 142 பயணிகளுடன் வந்த விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டன. பின்னர் 3 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

இதேபோல் டெல்லி, மும்பை, ஐதராபாத், மதுரை, கொச்சி உள்பட பல நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த மேலும் 10 விமானங்களும் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன. மழை நின்றதும், ரேடார் கருவி பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இதையடுத்து வானில் வட்டமிட்ட விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின.

பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட 3 விமானங்களும் சென்னைக்கு வந்து சேர்ந்தன. இதனால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
English summary-Chennai flights diverted to bangalore due to radar fault