சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து ஆலந்தூர் வரையிலான சேவை தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு சென்னை மக்களின் ஆதரவு பெருமளவு இருந்தாலும், கட்டணம் அதிகமாக இருப்பதாக ரயில் பயணிகள் இடையே கருத்துக்கள் வெளிவந்தது. மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என ரயில் பயணிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் பயணிகளின் வேண்டுகோளை ஏற்றும், சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் தற்போது 20 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கண்டிப்பாக ஒரு சந்தோஷமான செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

தற்போது ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையில் ஒருமுறை செல்ல ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 20 சதவீத கட்டண சலுகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வகையில் இந்த கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி ஒட்டு மொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டண சலுகையை பெற முடியும். குறிப்பிட்ட 2 நிறுத்தங்களுக்கு இடையே தினமும் பயணம் செய்வோருக்கு சலுகை அளிக்கப்படுகிறது.

12 முறை, 50 முறை, 100 முறை என 3 விதமான சலுகைகள் கொண்ட கட்டண அட்டைகள் வழங்கப்பட உள்ளன. 12 முறை பயண அட்டை 7 நாட்களுக்கும், 50 முறை பயண அட்டை 30 நாட்களுக்கும், 100 முறை பயண அட்டை 60 நாட்களுக்கும் செல்லுபடியாகும். இந்த பயண சலுகை அட்டையை பெற திரும்ப பெறத்தக்க முன்பணம் ரூ.50 செலுத்த வேண்டும். பயண அட்டையை திருப்பி கொடுத்தால், எஞ்சியுள்ள பயண முறைகளுக்கான கட்டணத்தையும், முன் பணத்தையும் பயணிகளிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் திருப்பி கொடுக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

English Summary : Chennai Metro announced 20% discount on fares.