cooptex-24102015தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பல தனியார் ஜவுளி நிறுவனங்கள் ஆண்கள் மற்றும் பெண்களை கவர புதுப்புது டிசைன்களில் துணிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் இந்த தீபாவளியை ஒட்டி புதிய வகை காட்டன் சட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டைக்கு இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சட்டைகளை தயாரித்து ஏற்கனவே வெற்றி பெற்ற தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு அமைப்பான கோ- ஆப்டெக்ஸ், தற்போது ஆண்களுக்காக ‘லிக்கோ’ என்னும் புதிய வகை கைத்தறி சட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோவையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த லிகோ கைத்தறி சட்டைகள், வேகமாக விற்றுத் தீர்ந்ததையடுத்து இரண்டாவது லோடு சரக்குகளும் வந்திருப்பதாகவும், பண்டிகை காலம் என்பதால் இன்னும் அதிக சட்டைகள் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டைகள் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்துப் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கைத்தறி சட்டைகளுக்குத் தேவையான நூல், உள்நாட்டுக் கைத்தறி நூல் உற்பத்தி மையங்களிடம் இருந்து பெறப்படுகிறது. நம்பிக்கையான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சிறந்த, தரமான கைத்தறி நூல்கள் பெறப்படுகின்றன. அதிலிருந்து ரெடிமேட் சட்டைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம்.

இவை சணல், நார் மூலம் உருவாக்கப்படும் கைத்தறி ஆடைகள், பருத்தி மூலம் உருவாக்கப்படும் கைத்தறி ஆடைகள் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முழுமையான கைத்தறி ஆடைகள் சுமார் 1,200 முதல் 1,400 ரூபாய் வரை, நான்கு விதமான அளவுகளில், ஆறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காட்டன் கலந்த கைத்தறி ஆடைகள் 10 வண்ணங்களில், 800 முதல் 1000 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. அனைத்து வகையான சட்டைகளும் இந்தியா முழுக்க உள்ள அனைத்து கோ- ஆப்டெக்ஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும்” என்று கூறினார்.

தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடந்த வருடம் 127 கோடிக்கு விற்பனை செய்த கோ- ஆப்டெக்ஸ் இந்த முறை 150 கோடியை விற்பனை இலக்காக வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. English summary-Co-optex, has introduced new linen shirts called LICO for men