தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 6 -ஆம் தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இருப்பினும் இப்பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
அரசு விரைவு பேருந்துகளில் நவம்பர் 3, 4 -ஆம் தேதிகளில் பயணம் செய்ய விரும்புவோர் புதன்கிழமை (செப்.5) வரை முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது: வழக்கமான நாள்களைக் காட்டிலும் பண்டிகை நாள்களில் விரைவு பேருந்துகளும், சொகுசு பேருந்துகளும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். இதுதவிர சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட ஏசி, படுக்கை வசதி ஏசி, மற்றும் கழிப்பறை வசதியுள்ள பேருந்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் அரசு விரைவு பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள், விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நவம்பர் 2 -ஆம் தேதியில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோர் செவ்வாய்க்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் நவம்பர் 3, 4-ஆம் தேதிகளில் பயணம் செய்ய விரும்புவோர் புதன்கிழமை வரை முன்பதிவு செய்யலாம். 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன.
இதில், சென்னையில் கோயம்பேடு, தியாகராய நகர், திருவான்மியூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதுதவிர, www.tnstc.in என்ற இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.