சென்னை: மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மின்வாரியம் பட்டியலிட்டுள்ளது.

தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இருப்பினும் மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம், அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மழைக்காலத்தில் மின்சாரம் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது, மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த வழிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.

* டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். வீட்டுக்கு சரியான எர்த் பைப் போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

* மேலும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.

* மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.

* மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.

* இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *