கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்தனர். மேற்கண்ட இரண்டு படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் வேறு வழியின்றி கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் தமிழகத்தில் புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் அதிகரித்துவிட்டது. இந்தியாவிலேயே அதிக அளவில் பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பது தமிழகத்தில்தான் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது. எனவே கடந்த மூன்று ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. 1100க்கு மேல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட என்ஜினீயரிங் கல்லூரிகள் பக்கம் போகாமல் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை படித்து போட்டித் தேர்வு மூலம் அரசு துறைகளில் சிறந்த பணிகளுக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் கலை அறிவியல் கல்லூரிகளை நாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக பி.காம். (பொது), பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் போன்ற பாடப்பிரிவுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.காம்., பி.ஏ. (ஆங்கிலம்), பி.எஸ்.சி. கணிதம் போன்ற பாடப் பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

சென்னையை பொருத்தவரை பிரபலமான கல்லூரிகளான லயோலா கல்லூரி, டபிள்யூ.சி.சி. கல்லூரி, எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, ஸ்டெல்லாமேரி கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி, எம்.சி.சி. கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் பெரும்பாலான இடங்களும் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதிக மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்காதவர்கள் திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள புறநகர் பகுதிகளில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளை நாடுகின்றனர். இதனிடையே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக் கழகத்துக்கு ஒருசில கல்லூரி நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டேவிட்ஜவகர் கூறியதாவது:- கலை அறிவியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்லூரிகள் கூடுதல் இடங்கள் கேட்டு பல்கலைக்கழகத்துக்கு கடிதம் கொடுத்தன. அவற்றை பரிசீலித்து கூடுதலாக 20 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் 400 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கூடுதல் இடங்கள் கேட்ட கல்லூரிகளில் வகுப்பறை, ஆசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில கல்லூரிகள் தற்போது கூடுதல் ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

English Summary : Fierce competition to join arts and science colleges.