மனை வரன்முறை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கு, வரன்முறை கட்டணத்தில், 50 சதவீதத்தை அபராதமாக விதிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைகளுக்கான வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது.இதில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நவ., 3ல் முடிந்தது. பின், அரசு வழங்கிய ஐந்து நாள் அவகாசம், நவ., 16ல் முடிவடைந்தது.இந்நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பிக்காத மனைகள் குறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர், கிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, வரன்முறைக்கு விண்ணப்பிக்காத மனைகளின் உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கணிசமான எண்ணிக்கையில், இன்னும் மனைகள் வரன்முறை திட்டத்தில் வராமல் உள்ளன. எனவே, விடுபட்டோரை, தாமதமானவர்கள் என்ற அடிப்படையில், இணைய தளத்தில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும். இதற்காக, வரன்முறை கட்டணத்தில், 50 சதவீத தொகையை அபராதமாக விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நவ., 3க்கு பின், ஆறு மாதம் வரை தாமதமாக விண்ணப்பிப்போருக்கு, வரன்முறை கட்டணத்தில், 10 சதவீதம்; ஓராண்டு வரை, 25 சதவீதம்; ஓராண்டுக்கு மேல், 50 சதவீதம் தொகையை, அபராதமாக விதிக்கலாம். அதற்கேற்ப, வரன்முறை விதிகளில் திருத்தங்கள் செய்ய, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில், ச.மீ.,க்கு, 15 ரூபாய்; நகராட்சிகளில், 30 ரூபாய்; மாநகராட்சிகளில், 50 ரூபாயும் அதிகபட்ச அபராதமாக இருக்கும். அரசின் ஒப்புதலுக்கு பின், இது தொடர்பான உத்தரவு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *