குரூப்-4 தேர்வு மூலம் 2,800 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையொட்டி 27 ஆயிரத்து 552 பேர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு நேற்று முன் தினம் தமிழ்நாடு முழுவதும் சென்னை, சிதம்பரம், திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 8 இடங்களில் 91 மையங்களில் நடைபெற்றது. காலையில் என்ஜினீயரிங் குறித்த தேர்வும், மாலையில் பொது அறிவுத்தேர்வும் நடைபெற்றது. சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் தேர்வு நடைபெற்றதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செ.ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர்கள் பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வை பார்வையிட்டேன். தேர்வு முடிவு இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் வெளியிடப்படும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 800 காலியாக உள்ளன. நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் 1,700 உள்ளன. மேலும் குரூப்-4 தேர்வுக்கு 2 ஆயிரத்து 800 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த 3 தேர்வுகளுக்கான அறிவிப்பும், இந்த மாத இறுதிக்குள் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்படும். அதாவது விரைவாக அறிவிக்கப்படும்.

நடந்து முடிந்த குரூப்-1 மெயின் தேர்வு முடிவு விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2-க்கு முதல் நிலை தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டது. அதற்கான முடிவு இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும்.

அரசு பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் இந்த இந்த தேர்வுகளை நடத்தப்போகிறோம், அந்த தேர்வு முடிவு வெளியிடுவது எப்போது என்பது குறித்து உத்தேச பட்டியல் அறிவிக்கப்படும். சில நேரங்களில் உத்தேச தேதிக்குள் முடிவை அறிவித்து விடுவோம். சில நேரங்களில் தேதி தள்ளிப்போகலாம். முடிந்த வரை விரைவாக வெளியிட்டு வருகிறோம். இப்போது யார் தேர்ச்சி பெற்றாலும் அவர்களின் நம்பர்களை அனைவரும் பார்க்கும்படி வெளியிடுகிறோம்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

English Summary : Tamil Nadu government group 4 exams updates will be announced soon to fill 2,800 vacancies.