மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ‘மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் நீதிபதிகள் வழங்கினர். அதேசமயம் தமிழக அரசு சார்பில் உரிய விளக்கம் அளித்ததுடன், விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து கூறப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த வாதத்தின்போது தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அப்போது, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பிக்கட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

ஹெல்மெட் அரசாணை மற்றும் அதன்பின்னர் 2015-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23-ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஹெல்மெட் விஷயத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்தும், அரசாணை குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *