சென்னை: இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும், கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். அணியாமல் செல்வோருக்கு, அபராதம் வசூலிக்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாலை விபத்துகளை குறைக்க, தமிழக அரசு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தாண்டு, ஜூலை வரை, இரு சக்கர வாகனங்களால் மட்டும், 15 ஆயிரத்து, 601 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன.இந்த ஆண்டு இரு சக்கர வாகன விபத்துகளில், 2,467 பேர் இறந்துள்ளனர்.இவர்களில், தலைக்கவசம்அணியாமல் சென்று, இறந்தவர்கள் எண்ணிக்கை, 1,811. போக்குவரத்து துறையில், இதுவரை, 2.14 கோடி இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை, தமிழகத்தில் உள்ள, மொத்த வாகன எண்ணிக்கையில், 84 சதவீதம்.உயிரிழப்பை தவிர்க்க, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, ‘ஹெல்மெட்’டும்; காரில் செல்லும் போது, ‘சீட் பெல்ட்’டும் அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது.மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 129ன்படி, அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர், கட்டாயம், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.எனவே, இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்வோரும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அணியாமல் செல்வோர் மீது, மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு, 177ன்படி, உரிய அபராதம் வசூலிக்கப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *