மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆனால் இந்த விதிகளை வாகன ஓட்டிகள் யாரும் கடைபிடிப்பதில்லை. எனவே இதுதொடர்பாக தமிழகஅரசு பிறப்பித்துள்ள அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என சென்னை கொரட் டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். அத்துடன் இந்த அரசாணை தீவிரமாக அமல்படுத்தப்படும் எனவும் உறுதி யளித்தார். மேலும், இதுதொடர்பாக நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
டிஜிபி சுற்றறிக்கை: இதற்கிடையே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந் திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.