vbk-11-chen_stanle_1110625gசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் இயங்கி வரும் சிறுநீரகத்துறை பிரிவு ஒரே மாதத்தில் 10 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னை பெரம்பூரை சேர்ந்த கல்பனா, ஓட்டேரி ஜெயந்தி, திருவொற்றியூர் சுரேஷ்பாபு, ஆலப்பாக்கம் ஆறுமுகம், காட்டூர் கற்பகம், கொளத்தூர் லட்சுமி, மேலவூர் நளினி, செய்யலூர் சுந்தரமூர்த்தி, பெரவள்ளூர் சசிகலா, மேடவாக்கம் தேவி ஆகியோர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் ராஜாராமன், சிறுநீரகவியல் துறை பேராசிரியர் எட்வின் பெர்னாண்டோ தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

அவர்களுக்கான சிறுநீரகங்கள், உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பெறப்பட்டதாகவும், 10 அறுவை சிகிச்சைகளையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக முடித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 24 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது மாற்று ஆபரே‌ஷன் செய்வதற்கு ரூ. 6 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை செலவாகும். இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சுமார் ஒரு வருட காலம் ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையும் இலவசமாகவே செய்யப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் மூலமே இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. எனவே அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: In one month, 10 kidney transplant operation. Adventure Stanley Hospital, Chennai