மினி புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் அதிவேக கதிமன் ரயில்சேவை இன்று முதல் டெல்லி, ஆக்ரா நகரங்களுக்கு இடையே தொடங்குகிறது. நிஜாமுதீன் – ஆக்ரா கதிமன் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். இந்த ரயில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு உள்ள தொலைவான 200 கிமீ தூரத்தை வெறும் 100 நிமிடங்களில் சென்று அடையும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ரயிலில் விமானத்துக்கு இணையான சேவை அளிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. விமானங்களில் பயணிகளை வரவேற்க பணிப்பெண்கள் இருப்பது போலவே இந்த ரயிலிலும் பணிப்பெண்கள் இருப்பார்கள். பயணிகளை ரோஜா பூவுடன் வரவேற்கும் அவர்கள் பயணிகள் தங்களின் இருக்கைக்கு சென்று அமர உதவுவர்.

தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில், இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை விட, கதிமன் ரயில் கட்டணம் 25 சதவீதம் அதிகம் என்றாலும் நவீன வசதிகளும் உணவு சேவையும் மிகச் சிறப்பாக இந்த ரயிலில் இருக்கும் என்பதால் கட்டணத்தை பெரிதாக பயணிகள் பார்க்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முழுகோதுமை உப்புமா, மினி தோசை, காஞ்சிபுரம் இட்லி, பழத் துண்டுகள், சிக்கன் ரோல், ஸ்பானிஸ் முட்டை, ஆம்லெட், கேக்குகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் ‘போன் சைனா’ பாத்திரங்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: India’s first Mini Bullet train service Gatimaan Express from Delhi(Nizamudin) to Agra Cantonment starts today.