12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து தங்களுடைய மேல்படிப்பை தொடர முதலில் தேர்வு செய்வது ஐ.ஐ.டி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தியாவில் செயல்படும் கல்வி நிலையங்களில் டாப் 10 எவை என்ற பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது. மெட்ராஸ் ஐஐடியை தொடர்ந்து ஐஐடி பாம்பே, மற்றும் ஐஐடி காரக்பூர் இடம்பெற்றுள்ளன. மேலாண்மை பட்டபடிப்புகான கல்வி நிலையத்தில் அகமதாபாத் ஐஐஎம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஐஐஎம் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதாக சர்ச்சையில் சிக்கிய ஜே.என்.யூ. மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகங்கள் முறையே 3 மற்றும் 4-ம் இடத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ், பெங்களூரு, பல்கலைக் கழகங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

மொத்தம் 4 பிரிவுகளில் தரவரிசை உருவாக்கப்பட்டது. பொறியியல், மேலாண்மை, மருந்தியல் மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் என்று பிரிக்கப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டது. மருந்தியல் (பார்மசி) பிரிவில் மணிப்பால் மருந்தியல் அறிவியல் கல்லூரி நாட்டின் முதல் தரக் கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தரவரிசை முழு பட்டியல்:

டாப் 10 பொறியியல் கல்வி நிறுவனங்கள்:

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே, ஐஐடி காரக்பூர், ஐஐடி டெல்லி, ஐஐடி கான்பூர், ஐஐடி ரூர்கீ, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி காந்திநகர், ஐஐடி ரோபர்-ரூப்நகர், ஐஐடி பாட்னா.

மேலாண்மை படிப்பு கல்வி நிறுவனங்கள் டாப் 10:

ஐஐஎம் பெங்களூரு, ஐஐஎம் அகமதாபாத், ஐஐஎம் கொல்கத்தா, ஐஐஎம் லக்னோ, ஐஐஎம் உதய்பூர், ஐஐஎம் கோழிக்கோடு, சர்வதேச மேலாண்மை நிறுவனம் புதுடெல்லி, இந்திய வனமேலாண்மை கல்வி நிறுவனம், போபால், கான்பூர் மேலாண்மை கல்வி நிலையம், ஐஐஎம் இந்தூர்.

டாப் 10 பல்கலைக்கழகங்கள்:

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ், பெங்களூரு, ரசாயன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், அசாம், டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருவனந்தபுரம், பிட்ஸ், பிலானி; அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

டாப் 10 பார்மசி (மருந்தியல்) பட்டப்படிப்பு கல்வி நிறுவனங்கள்:

மணிப்பால் பார்மசி கல்லூரி, பார்மசூட்டிகள் அறிவியல் பல்கலைக்கழகம், சண்டிகர், ஜாமியா ஹம்தர்த், புதுடெல்லி, பூனா மருந்தியல் கல்லூரி, இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசி, நிர்மா பல்கலைக்கழகம் அகமதாபாத், பாம்பே மருந்தியல் கல்லூரி, பிர்லா தொழில்நுட்ப கல்விக்கழகம், ராஞ்சி, அமிர்தா மருந்தியல் கல்வி நிறுவனம், கொச்சி, ஜே.எஸ்.எஸ். காலேஜ் ஆஃப் பாரம்சி, உதகமண்டலம், ஜே.எஸ்.எஸ். பார்மசி காலேஜ், மைசூரு.

12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த எந்த கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் என்று ஆலோசித்து வரும் மாணவர்களுக்கு இந்த பட்டியல் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: National Level Educational Institute Rankings Chennai IIT got first Place.