பாரத பிரதமரின் முயற்சியால் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொதுமக்கள் சிறப்பாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். புதுடில்லியில் அன்றைய தினம் பிரதமர் மோடி முன்னிலையில் யோகாத்தான் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் அதே நாளில் தமிழகத்திலும் யோகாத்தான் நிகழ்ச்சிக்கு வாழும் கலை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தத் தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ரங்கநாத் அவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: யோகாத்தான் நிகழ்ச்சியில், கல்வி நிலையங்கள், சிறைகள், பொதுப் பூங்காக்கள், சமூக நல மையங்கள் ஆகியவற்றில் 60-க்கும் மேற்பட்ட யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். சென்னையில் ஜூன் 21 ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரையில் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு யோகா விற்பன்னர் ஸ்ரீ ருத்ரேஷ் குமார் சூரிய நமஸ்காரம் செய்வது குறித்த பயிற்சி அளிப்பார் என்றார் ரங்கநாத்.

மேலும் கர்நாடிகா அமைப்பு சார்பில் சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு, சென்னையில் நாத இசை விழா மியூசிக் அகாடமியில் ஜூன் 20 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. இந்தத் தகவலை கர்நாடிகா அமைப்பின் அறங்காவலர் கே என் சசிகிரண் தெரிவித்தார். “சர்வதேச இசை, யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடிகா அமைப்பு, ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு இணைந்து நடத்தும் இந்த இசை விழாவில் பிரபல இசைக் கலைஞர்கள் பங்கு பெறுகின்றனர். இந்த ஆண்டு இசை விழாவில் கர்நாடக இசை கலைஞர் அருணா சாய்ராம் பன்மொழி இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களும் இணைந்து பாடலாம். ராஜஸ்தான் மங்கனியர் இசைக் கலைஞர்கள் இணைந்து சுபி பக்தி இசைப் பாடல்களைப் பாட உள்ளனர். மாநகராட்சி பள்ளியில் படிக்கும் நலிவுற்ற குழந்தைகளின் கல்விக்காக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது” என கே என் சசிகிரண் கூறியுள்ளார்.

English Summary : International Yoga Day will be conducted on June 21st in Pachaiyappa’s College ground, Chennai.