இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரண்டு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வரும் நிலையில் தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சி மற்றும் ஜி.பி.எஸ். சேவைக்காக ரூ.1,420 கோடி மதிப்பிலான 7 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அந்த வகையில் ஏற்கனவே 6 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி என்ற 7-வது செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 51 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ கடந்த 26-ந் தேதி காலை 9.20 மணிக்கு தொடங்கியது.

இந்த கவுண்ட்டவுன் முடிவடைந்த நிலையில் இன்று பகல் 12.50 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணித்த செயற்கைக்கோள், விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 7-வது செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியா ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனைபடைத்த விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் நமது விஞ்ஞானிகள் பல சாதனைகளை படைத்திருப்பதாக கூறிய பிரதமர் விலைமதிப்பில்லா பரிசை நாட்டு மக்களுக்கு அவர்கள் தந்திருப்பதாகவும் கூறினார். விமானிகள் முதல் மீனவர்கள் வரை அனைவருக்கும் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.