நடப்பு கல்வி ஆண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை இரண்டு கட்டமாக அதாவது மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும் என்று மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்வுகளின் முடிவை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு, வேலூர் சிஎம்சி உள்பட பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது. சங்கல்ப அறக்கட்டளை என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றில் “நுழைவுத் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பிறகும் அதை அமல்படுத்தாமல் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக முறையிட்டிருந்தது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனில் ஆர். தவே, சிவ கீர்த்தி சிங், ஏ.கே. கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை செய்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்தும், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங்கும் ஆஜராகினர்.

52 நகரங்களில் உள்ள 1,040 மையங்கள் மூலம் நடத்தப்படும் அகில இந்திய மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு 6,67,637 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ நுழைவுத் தேர்வை நடப்பு கல்வி ஆண்டிலேயே நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி மே 1ஆம் தேதியே நடைபெறட்டும். அதை தேசிய தகுதி, நுழைவுத் தேர்வின் முதலாவது கட்டமாக கருத வேண்டும். அந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், இரண்டாம் கட்டமாக ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். இந்த இரு தேர்வு முடிவுகளையும் வரும் ஆகஸ்ட் 17-இல் வெளியிட மத்திய அரசு தயாராக உள்ளது என்று வாதிட்டனர்.

ஆனால் தெலங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடக மாநில மருத்துவக் கல்லூரிகள் சங்கம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், “அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்கக் கூடாது’ என்று வாதிட்டனர். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் நாகேஸ்வர ராவ் ஆஜராகி, “தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எழுதாமல் நேரடியாக மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது; இது அரசின் கொள்கை முடிவாகும். இந்நிலையில், தேசிய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளித்தால் அது, சம வாய்ப்பை பெறுவதற்கான உரிமையை மாணவர்களுக்கு மறுப்பதாக அமையும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: சிபிஎஸ்இ முன்மொழிந்துள்ள தேர்வு அட்டவணைப்படி, மே 1ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை முதலாவது கட்ட தேசிய தகுதி, நுழைவுத் தேர்வாக கருத அனுமதிக்கிறோம். முதல் கட்டத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்காதவர்கள், மறுவாய்ப்பாக ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வை இரண்டாம் கட்டத் தேர்வாகக் கருத அனுமதிக்கிறோம்.

இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் உள்ளிட்ட நடைமுறைகளை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ முடிக்க வேண்டும். இதன் மூலம் 2010, டிசம்பர் 21-இல் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லுபடியாகும். ஆகவே, இதில் புதிதாக வேறு உத்தரவை பிறப்பிக்கத் தேவையில்லை. அதே சமயம் இந்த உத்தரவு, தேர்வு முறை தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அனைத்து மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் நிகழாண்டு முதலே பொருந்தும். மேலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகளின் மனுக்களைத் தள்ளுபடி செய்யப்படாமல், நிலுவையில் வைத்துள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

English Summary : Supreme court ordered 2 phase entrance exam for Medical studies this year.