சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் சற்று முன்னர் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின் பேரில், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர்களின் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்பு நடைபெற்றது. இன்று இந்த மேல்முறையீட்டு மனு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை சற்று முன்னர் நீதிபதி குமாரசாமி வெளியிட்டார். இந்த தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர்களையும் விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். .

அதுமட்டுமின்றி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர்களுக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவை இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பார் என்றும், ஜெயலலிதா இன்னும் சிலமணி நேரத்தில் சென்னை போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தபடவில்லை.

English Summary: Jayalalitha and three other victims were released from the assets case, Karnataka High Court.