சென்னை மெட்ரோ ரயிலின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு சோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனையை பெங்களூரில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல், அதிகாரிகள் சீனிவாஸ், பழனி ஆகியோர் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒவ்வொன்றாகச் சோதனை செய்தனர். மேலும் இந்த ரயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

மெட்ரோ ரயில் பெட்டியில் உள்ள தானியங்கிக் கதவு, அவசரக் காலத்தில் ரயிலில் இருந்து தப்பிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாகச் செயல்படுவதை உறுதி செய்த ஆய்வாளர்கள் விபத்து மற்றும் அவசரக் காலத்தில் பயன்படுத்தக் கூடிய பொத்தான்கள், ரயில் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளக் கூடிய கருவிகள் ஆகியவை சரியாக வேலை செய்கின்றதா என்பதையும் அவர்கள் சோதித்து பார்த்தனர்.

மேலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இறங்கி அங்கு செய்யப்பட்டுள்ள பயணிகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் பின்னர் ரயில் செல்லும் வேகம், பிரேக் போன்றவற்றையும் சோதனை செய்தனர். தீ விபத்து போன்ற அவசரக் காலங்களில் ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறக் கூடிய வழிகள் சரியாக செயல்படுகின்றா என்பதையும் அதிகாரிகள் சோதனை செய்ததாக மெட்ரோ ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடந்த இந்தச் சோதனையில் அதிகாரிகளுக்கு பரிபூரண திருப்தி ஏற்பட்டதாகவும், இந்த சோதனையின் அறிக்கையை ரயில்வே அமைச்சகத்துக்கு அவர்கள் விரைவில் அனுப்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிக்கை அனுப்பப்பட்டவுடன் இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் நடத்தப்படும் என்றும் அதில் மெட்ரோ ரயில் பணிமனை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

English Summary: Chennai Koyambedu to Alandhur Metro Rail Pathway’s preliminary Study was finished.