1law
அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் 20ஆம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய ஆறு இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்பு (BALLB) உள்ளது. இதில் மொத்தம் 1,052 இடங்கள் இருக்கின்றன.

2015-16 கல்வியாண்டில் சட்டப்படிப்பில் சேர சுமார் 5,500 பேர் விண்ணப்பித்துள்ளதை அடுத்து இவர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு பலகையில் இந்த தரவரிசை பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலை நேற்று ஏராளமான மாணவ-மாணவிகளும் பெற்றோரும் ஆர்வத்தோடு வந்து பார்த்தனர்.

தரவரிசைப் பட்டியலை தொடர்ந்து, தாங்கள் சேர விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் சட்டப் பல்கலைக்கழகத்தில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

கவுன்சிலிங்கிற்கான அழைப்புக் கடிதம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்று தமிழ்நாடு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவரும், சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளருமான பேராசிரியர் எம்.எஸ்.சவுந்தரபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட் ஆப் மதிப்பெண் பட்டியலை இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். கட் ஆப் மார்க் விவரம் வருமாறு:

ஓசி – 89.875

பிசி – 81.250

பிசி (முஸ்லிம்) – 77.000

எம்பிசி, டிஎன்சி – 79.875

எஸ்சி – 80.000

எஸ்சி (அருந்ததியர்) – 79.375

எஸ்டி – 65.875

ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே கட் ஆப் மதிப்பெண் வரும் பட்சத்தில் யார் வயதில் மூத்தவரோ அவருக்கு கவுன்சிலிங்கின் போது முன்னுரிமை அளிக்கப்படும்.

English Summary:Law counselling will start a coming 20th