MSV
பழம்பெரும் இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்பட்டவருமான எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என கூறப்படுகிறது. தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 1928 ஜூன் 24 ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த எம்.எஸ்.விஸ்வநாதன், 1945 முதல் 2015 வரை தொடர்ச்சியாக 60 ஆண்டு காலம் திரைத்துறையில் பல சாதனைகளை செய்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 1,200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன். ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களிலும், தனியாக 500 படங்களுக்கு மேலும் இசை அமைத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் முதன்முதலாக இசையமைத்த திரைப்படம் கடந்த 1953ல் வெளிவந்த ‘ஜெனோவா’ என்ற திரைப்படம். நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சிவாஜி கணேசன் நடித்த புதிய பறவை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு வெறும் மூன்றே மூன்று இசைக் கருவிகளையும் பயன்படுத்திய இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு ஆகிய இசைக்கருவிகளை மிக அருமையாக வாசிக்கும் திறமை படைத்தவர். கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்து பெருமை பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன், அவரே பல படங்களிலும் பாடியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் போரின் முடிவில் 1965ஆம் ஆண்டு போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களின் சந்தோஷத்திற்காக பாடினார்.

தமிழ் திரையுலகின் சாதனையாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் ஒரே பிறந்த தேதியில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் என்னவோ, இருவரும் இணைந்து பல காலத்தால் அழியாத காவியப் பாடல்களை கொடுத்துள்ளனர். மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் இவ்வுலகை விட்டு நீங்கினாலும், அவரது இசை என்ற உயிர் உலகம் உள்ளவரை நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம்.

English Summary:Legendary musician died of MSV