தமிழகத்தில் கோடை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கோடையிலும் சென்னை மக்கள் கடுமையான வெயிலை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸார் வெயிலின் கொடுமையால் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். இந்நிலையில் போக்குவரத்து போலீஸார்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கோடை காலங்களிலும் அவர்களுக்கு எலுமிச்சை சாறு அல்லது மோர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்த வருடமும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸார்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
போக்குவரத்து போலீஸார் கடும் வெயில் காலங்களிலும் சாலை சந்திப்புகளில் பணிபுரிய வேண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி, போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு கோடை காலத்தில் 4 மாதங்களுக்கு தினமும் 4 முறை எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்படுகிறது.
எலுமிச்சம் பழச்சாறுக்கு பதிலாக மோர் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து போலீஸாரில் சிலர் வேண்டு கோள்விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரையான 4 மாதமும் போக்குவரத்து போலீஸாருக்கு அவரவர் விருப்பப்படி எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இப்போதே ஏற்பட்டுள் ளதால், போக்குவரத்து போலீஸார் எவ்வித இடர்பாடும் இன்றி பணிபுரியும் வகையில் அவர்களுக்கு 21-ம் தேதி (நேற்று) முதல் எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary: Lime Juice for Chennai Traffic Police. CM Order.