சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லீரல் விழிப்புணர்வு கண்காட்சி ஒன்று சென்னையில் இன்று முதல் தொடங்கவுள்ளது. சென்னை கல்லீரல் அறக்கட்டளையின் சார்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மஞ்சள் காமாலை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து இந்த கண்காட்சி நடத்தப்படுவதாகவும், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.எஸ்.ஆர். மஹாலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள் வருகை தந்து கல்லீரல் குறித்த தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லீரல் நோய் குறித்த முக்கியத் தகவல்கள், தடுக்கும் முறைகள் குறித்த விடியோ காட்சிகள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். இந்த கண்காட்சியில் கல்லீரல் நோய்கள் குறித்த தகவல்கள், விளக்கங்கள் குறித்த சுவரொட்டிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும்.

கண்காட்சியில் மஞ்சள் காமாலை பி, சி வகை தொற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பைப்ரோ ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் சலுகைக் கட்டணத்தில் செய்யப்படும். கல்லீரல் பாதுகாப்பு, கல்லீரல் நோய்கள் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். இதுதவிர, மதுவால் உண்டாகும் கெடுதல் குறித்து அறிஞர்கள் எடுத்துரைக்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி மூன்று நாள்களும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Liver awareness will be conducted in Chennai for three days in Purasavakkam MSR mall.