examresult4516தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் வேதியியல் தேர்வு மார்ச் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்த வேதியியல் தேர்வில் பிரிவு 1-ல் 18–வது வினாவும் (ஒரு மதிப்பெண்), பிரிவு 4-ல் 70–வது வினாவும் (5 மதிப்பெண்) தவறாக கேட்கப்பட்டதாகவும், இதனால் வேதியியல் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று அரசுக்கு மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டாலும், தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்ற மாணவர்கள் அனைவருக்கும் 6 மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்நிலையில் கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்க தடை விதிக்குமாறு நெல்லையைச் சேர்ந்த பேராசிரியர் பேராசிரியர் எஸ்.சாமுவேல் ஆசிர்ராஜ், மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்கள் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

என் மகன் எஸ்.ரிச்சர்டுசாமுவேல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறான். அவனுக்கு மருத்துவம் படிக்க விருப்பம். இதற்காக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் கண்விழித்துப் படித்தான். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் பிரிவு 1-ல் 18 வது கேள்வி, பிரிவு 4-ல் 70-வது கேள்வி ஆகிய மிகவும் கடினமானது. வேதியியல் பாடத்தை முழுமையாக படித்த திறமையான மாணவர்களால் மட்டுமே இவ்விரு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும். இந்த சிக்கலான கேள்விகளுக்கு என் மகன் உள்பட ஏராளமான மாணவர்கள் சரியாக பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விரு கேள்விகளுக்கும் பதிலளிக்க முயன்ற அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். அந்த இரு கேள்விகளும் பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகள் தான். பாடத்திட்டத்தைச் சாராத, வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி அல்ல. இதனால் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காதது மாணவர்கள் தவறு தான். கருணை மதிப்பெண் வழங்கும் போது அந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த வேதியியல் பாடத்தில் திறமையான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இதனால் இரு கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்கவும், கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். அதுவரை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.என்.பிரகாஷ் ஆகியோர் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட மறுத்துவிட்டனர். மேலும் இந்த மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய பள்ளிக்கல்விச் செயலர், தேர்வுத்துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பள்ளி கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.

English Summary: Madurai High court Branch Refusal for stop the 12th Exam Result.