Birla-Planetarium-1சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் தேதி நடக்கிறது. இந்த அரிய நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவுள்ளதால் விஞ்ஞானிகளும் பொதுமக்களும் இதை பார்க்க ஆவலுடன் உள்ளனர். ஆனால் இந்த நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்றும் தகுந்த பாதுகாப்புடன் தான் பார்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புதன்கோள் சூரியனின் முன் நகரும் அரிய நிகழ்வு வரும் 9ஆம் தேதி நடக்கிறது. இதனை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வை பார்ப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கில் 4 தொலைநோக்கி கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதன்கோள் சூரியனை கடக்கும் நிகழ்வை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணலாம். இந்தியாவில் சூரியன் மறையும்போது மட்டுமே இந்த நிகழ்வை காணமுடியும். ஆனால் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகளில் சூரிய உதயம் ஆகும்போது பார்க்க முடியும்.

இந்தியாவில் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, 2003ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஆகிய தேதிகளில் இந்த அரிய நிகழ்வு நடந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நூற்றாண்டுக்கு 8 முறைதான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும். அடுத்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி இந்த நிகழ்வை காணலாம். அதன் பின்னர் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆந்தேதி தான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும். மேற்கண்ட தகவலை சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

English Summary: Mercury Cross Sun on May 9. Chennai birla planetarium Special Arrangement.