parlimentசெல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கை விளைவிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் எவ்வித தீங்கும் இல்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறினார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

இதுவரை நடத்திய ஆய்வுகள் அத்தனையிலும், செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கோ, பறவைகளுக்கோ தீங்கு ஏற்படுவதாக கண்டறியப்படவில்லை. இது பற்றி உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய ஆய்வில் கூட செல்போன் கதிர்வீச்சால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்றே தெரிய வந்துள்ளது. செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்ற பிரச்சினை இந்தியாவில் மட்டும் ஏன் எழுப்பப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் செல்போன் சேவைகள் உள்ளது. ஆனால் இந்த கேள்விகள் அங்கெல்லாம் எழுப்பப்படவில்லை. நாம் ‘டிஜிட்டல் இந்தியா‘வை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்று பாதகமாக பிரசாரம் செய்வது கவலை அளிக்கிறது. நாட்டின் பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் செல்போன் அல்லது செல்போன் கோபுரங்களால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்பது தொடர்பாக 6 முக்கிய தீர்ப்புகளை அளித்து இருக்கின்றன. அப்படி இருந்தும் செல்போன் கதிர்வீச்சு தொடர்பான தவறான பிரசாரம் ஓய்ந்தபாடில்லை.

பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் செல்போன் கதிர்வீச்சு பற்றி உறுப்பினர்கள் இனிமேலும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பவேண்டாம். செல்போன் சேவைகளில் பாதுகாப்பு அளவீடுகள் உலக அளவில் மிகவும் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

English Summary: There is no Harm for Cellphone Radiation. Central Minister Announced in Parliament.