Medical counselingஎம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என 63 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும் இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, மருத்துவக் கலந்தாய்வை கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களோடு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. இதனால் பழைய மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஆனால், இட ஒதுக்கீட்டு ஆணையை மட்டும் வழங்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தை 2006 என்ற சட்டத்தை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு மாணவர்களை மருத்துவக் கல்வி கலந்தாய்வில் அனுமதிக்கக்கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தின்படி, 17 வயது பூர்த்தியான மாணவர்கள் மருத்துவ கல்வி கலந்தாய்வில் கலந்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. அந்த சட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை. இதை எதிர்த்து மாணவர்கள் வழக்கு தொடரவில்லை.

எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மேலும், கடந்த கல்வியாண்டு மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் கலந்துக் கொள்வதால், நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு பாதிப்பு வரும் என்பதையும் ஏற்க முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

English Summary : Medical counseling . The main judgment of the court in Chennai