How to buy quality helmets Some Suggestionsவரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வாகனங்களின் பின்னால் உட்கார்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது ஹெல்மெட் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தரமான ஹெல்மெட்டை வாங்கி அணிவதுதான் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் உண்மையிலேயே கொடுக்கும் மதிப்பு ஆகும். தரமான ஹெல்மெட்டுக்களை வாங்குவது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

1. தலைக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதற்குத் தான் ஹெல்மெட். அதை உணர்ந்து தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டை, தங்களது தலையின் அளவுக்குப் பொருத்தமாக உள்ளதா? என்பதை அறிந்து வாங்க வேண்டும்.

2. ஹெல்மெட் பெரிதாக இருந்தால், திடீரென இறங்கி கண்களை மறைக்கும் ஆபத்து உண்டு. அவ்வாறு இறங்கிவிடக்கூடாது என்று சமப்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டினால், சீக்கிரமே கழுத்துவலி வந்துவிடும். விபத்து நேரத்தில் தனியே கழன்று ஓடிவிடும் ஆபத்தும் உண்டு. எனவே சரியான அளவு ஹெல்மெட் என்பதில் சமரசம் கூடாது.

3.ஹெல்மெட் உடையாமல் உறுதியாக இருப்பது மட்டுமே நல்ல ஹெல்மெட் என்று அர்த்தம் கிடையாது. மோதினால் அந்த பாதிப்பை குறைக்கும் வகையில் உரிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டவை தான் பலன் தரும். எனவே, முடிந்தளவுக்கு நீண்டகாலமாக தயாரிப்பைத் தொடரும் தரமான நிறுவனங்களின் ஹெல்மெட்டை தேர்வு செய்வது நல்லது.

4. போலி ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் இருக்கும் ஹெல்மெட் வாங்குவதை தவிர்த்துவிட வேண்டும். இதற்காக உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற ஹெல்மெட் நிறுவனங்களின் பெயர்களை முன்கூட்டியே இணையத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

5.கண்களை மறைக்கிற பிளாஸ்டிக் கண்ணாடியானது, தெளிவாகப் பார்க்கும் வகையிலும், தேவைப்படும்போது மடக்கி விட்டால் நிற்பதாகவும் இருக்க வேண்டும்.

காவல்துறையினர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக கண்டகண்ட ஹெல்மெட்டுக்களை வாங்கி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம். தரமான பாதுகாப்பான ஹெல்மெட்டுக்களை அணிந்து, உங்கள் உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள்

English Summary: How to buy quality helmets  Some Suggestions