rbi-02இந்தியாவில் இயங்கிவரும் 26 சிறிய வங்கிகளை 6 பெரிய வங்கிகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றுடன் சிறிய வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், யூகோ வங்கி ஆகியவற்றையும், யூனியன் வங்கியுடன் சென்ட்ரல் பாங்க், தேனா வங்கி ஆகியவற்றையும், ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, விஜயா வங்கி போன்ற வங்கிகளை பாங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நிர்வாக வசதிக்காக இந்த இணைப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படினும் வங்கிகளை ஒருங்கிணைக்கும்போது அதிலுள்ள ஊழியர்களை பணியமர்த்துவது மிகப்பெரிய சவால் என்றும் இவ்வாறு வங்கிகளை இணைப்பது அவை வராக்கடன் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த இணைப்பு சாதாரண மக்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முடிவு என்றும் இதன்மூலம் தனியார் வங்கிகளை ஊக்குவித்து பொதுத்துறை வங்கிகளை இழுத்து மூடும் முடிவில் அரசு செயல்படுகிறது என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் கொந்தளிக்கின்றன.
English Summary: Merging 26 Banks into six big Lenders?