கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு நடத்தினர். பின்னர் தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர்களின் வருகை மற்றும் மாணவர்களின் வருகை கட்டிட வசதி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதைதொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்த சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சீருடைகள் அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் அரசுக்கு சாதகமாக வந்துள்ளது. எனவே அடுத்த வாரம் இறுதிக்குள் 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு அந்த இலவச சைக்கிள் வழங்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு 11-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக படித்து உயர வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 20 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இது போன்ற பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதற்காக 412 தேர்வு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 319 ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சியில் 1472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பாக பயிற்சி அளிப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்.
மாணவிகள் பள்ளிக்கு செல்லும் பொழுது ஏற்படும் இடையூறுகள் குறித்து தகவல் அளிக்க 14417 என்ற இலவச தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணில் புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முழுவதும் விரைவில் நிரப்பப்படும். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக ரூ. 4 கோடி மதிப்பீட்டில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.